மும்பை: ஆமீர்கான் நடித்து வெளிவந்துள்ள பிகே திரைப்படத்திற்கு வட இந்திய இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரைப்படம் மறைமுகமாக லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்து பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் பிகே. இந்த திரைப்படத்தில் வேற்றுகிரகவாசி ஏலியனாக ஆமீர்கான் நடித்துள்ளார்.
இந்த உலகம் அவருக்கு புதிது என்பதால், கடவுள் நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து பல்வேறு கேள்விகளை ஆமீர்கான் முன்வைப்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.
டிவிகளில் சொற்பொழிவாற்றும் இந்து சாமியார் ஒருவரை அழைத்து வந்து எடக்குமடக்காக கேள்வி கேட்பது போன்ற காட்சியும், கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வோரை பார்த்து கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டமான வழிபாட்டு முறையை அங்கீகரிக்கிறார் என்று கேட்பது போலவும் காட்சிகள் உள்ளன.
வெள்ளைபுடவை கட்டினால் கணவரை இழந்த பெண் என்று அர்த்தப்படுத்தியிருக்கும் ஆமீர்கான் கதாப்பாத்திரம், சர்ச்சில் வெள்ளை ஆடையுடன் திருமணம் செய்ய போகும் பெண்ணை பார்த்து உங்கள் கணவர் செத்துவிட்டாரா என்று கேட்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.
மேலும், ஹீரோயின் அனுஷ்கா, பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியரை காதலிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. எனவே இந்து அமைப்புகள் படத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன. லவ் ஜிகாத் எனப்படும் காதல் புனிதப்போரை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் நாட்டுக்காரரை, இந்திய பெண் காதலிப்பது போன்ற காட்சி வைத்துள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆமீர்கான் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால்தான் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே பிகே படத்தை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் வட இந்திய வலதுசாரி ஆதரவாளர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்துவருகின்றனர். மற்றொருபுறம், படத்தை ஆதரிக்க கோரி ஆமீர்கான் ரசிகர்களும், இஸ்லாமியர்களும் ஹேஷ்டேக் போட்டுவருகின்றனர்.
Post a Comment