பாலச்சந்தர் படங்களை ஆவணப்படுத்த ரஜினி, கமல் முயற்சிக்க வேண்டும் - சிவகுமார்

|

கே பாலச்சந்தரின் படைப்புகளை ஆவணப்படுத்த ரஜினி, கமல் போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

மறைந்த பாலச்சந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் சிவகுமார் கூறியதாவது:

தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடிப்பில் இமயமாக திகழ்ந்ததுபோல இயக்குநர் பாலச்சந்தர் இயக்குனர் இமயமாக திகழ்ந்தார். திரைஉலகில் பல்வேறு சாதனைகளை அவர் செய்துள்ளார்.

பாலச்சந்தர் படங்களை ஆவணப்படுத்த ரஜினி, கமல் முயற்சிக்க வேண்டும் - சிவகுமார்

ரஜினி, கமல் மட்டுமின்றி 60- க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். நடிகர் விவேக், பிரகாஷ் ராஜ், சரிதா, ஸ்ரீபிரியா ஆகியோருக்கு வாழ்க்கைக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் பெரிய கோடீஸ்வரர் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். 12 வயதிலேயே நாடகங்களை நடத்தி காட்டி பரிசுகளை பெற்றவர். எந்த ஒரு இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் தனது திறமையை மட்டுமே நம்பி திரை உலகில் சாதித்து காட்டியவர்.

100 - க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கும் பாலச்சந்தர் ‘சிந்து பைரவி' உள்ளிட்ட 6 படங்களை என்னை வைத்து இயக்கி இருக்கிறார். தான் இயக்கியதில் பிடித்த பல படங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் நான் நடித்த படங்களும் இடம் பிடித்துள்ளது. அது எனக்கு பெருமையாக உள்ளது.

அவர் இயக்கிய ‘அரங்கேற்றம்' படம் தமிழகம் முழுவதும் பிராமணர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தான் சொல்லவேண்டிய கருத்துக்களை துணிச்சலாக சொல்லக் கூடியவர் அவர்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் பெண்களின் பெருமையை போற்றிய ‘அவள் ஒரு தொடர் கதை', ‘மனதில் உறுதி வேண்டும்' உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார்.

எதிர்கால சந்ததியினரும் அவர் இயக்கியுள்ள படங்களை தமிழ் திரை உலகினர் ஆவணப்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் ரஜினியும், கமலும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Post a Comment