கப்பல் விமர்சனம்

|

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: வைபவ், சோனம் பாஜ்வா, விடிவி கணேஷ்

இசை: நடராஜன் சங்கரன்

தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: கார்த்திக் ஜி கிரீஷ்

லாஜிக் பார்க்கக்கூடாத சிரிப்புப் படங்களில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது கப்பல்.

கப்பல் விமர்சனம்

நல்ல நட்பை காதலும் கல்யாணமும் பிரித்துவிடும் என நினைத்து பள்ளி நாட்களிலேயே பெண்களை வெறுக்கிறார்கள் வைபவும் அவர் நண்பர்கள் நால்வரும். வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என சத்தியம் செய்கிறார்கள்.

ஆனால் வளர்ந்து பெரியவர்களான பிறகு, வைபவுக்கு காதல் வருகிறது. சோனம் பாஜ்வாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மறைக்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் நண்பர்கள் வைபவ் - சோனம் காதலைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

கப்பல் விமர்சனம்

காதலர்கள் பிரிந்தார்களா... இணைந்தார்களா என்பது மீதிக் கதை.

பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்து சிரிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். இதில் சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், படம் முழுக்க நான் ஸ்டாப் சிரிப்பு வருவதென்னமோ உண்மைதான்.

குடிக்கும் காட்சிகளில் ஆண்களை மட்டும்தான் காட்ட வேண்டுமா... பெண்கள், அதுவும் இளம் பெண்கள் சர்வசாதாரணமாக சரக்கடிப்பது போல காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். இது காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாதிரி கதைகளில், குடிக்கிற காட்சிகளுக்கு என்ன அவசியமிருக்கிறது என்றும் புரியவில்லை.

கப்பல் விமர்சனம்

வைபவுக்கு இது முக்கியமான படம். ஒரு நகைச்சுவைப் படத்தில் ஹீரோ பளிச்சென்று தெரிவது அத்தனை சாதாரண விஷயமல்ல. வைபவுக்கு நல்ல நடிப்பும் வருகிறது, நகைச்சுவையும் வருகிறது. விடிவி கணேஷை அவர் மாடியிலிருந்து தள்ளிவிட முயலும் காட்சியிலும், பஞ்ச பாண்டவ நண்பர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் திணறும்போதும் முக பாவங்கள் வெகு இயல்பு.

விடிவி கணேஷ் இந்தப் படத்தின் இன்னொரு ப்ளஸ். அவர் வரும்போதெல்லாம் மக்கள் இயல்பாகவே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கப்பல் விமர்சனம்

நண்பர்களாக வரும் கருணாகரன், அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் என நால்வருமே இயல்பான நகைச்சுவையை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் வைபவை வெறுப்பேற்றும் காட்சிகளும், அவரிடமிருந்து சோனம் பாஜ்வாவைப் பிரிக்க போடும் திட்டங்களும் கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி சோனம் பாஜ்வா கவர்ச்சியில் ஏக தாராளம் காட்டுகிறார். சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். தமிழ் சினிமாவில் நாயகியாக நிலைக்க இது போதாதா என்ன!

கப்பல் விமர்சனம்

இளையராஜாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரது கரகாட்டக்காரனில் இடம் பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். கேட்க சுகமாக இருந்தது. காட்சிக்கும் அத்தனைப் பொருத்தமாக அமைந்த பாட்டு அது. ஒளிப்பதிவும் இசையும் சராசரி ரகம்தான்.

ஷங்கரின் சீடர் என்றாலும் பிரமாண்டத்தை செட்டுகளிலும் லொகேஷன்களிலும் காட்டாமல், நகைச்சுவையில் காட்டியதற்காக இயக்குநர் கார்த்திக் ஜி கிரீஷைப் பாராட்டலாம்.

 

Post a Comment