வா தலைவா!.... லிங்காவை கொண்டாடத் தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

|

சென்னை: உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு நாளைதான் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான்... இன்னபிற பண்டிகைகளும் நாளைதான்!

ஏனெனில் நாளைதான் ரஜினி நடித்த லிங்கா படம் உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் லிங்கா வெளியாகிறது. இதற்கான புக்கிங் நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே மூன்று நாட்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாம்.

வா தலைவா!.... லிங்காவை கொண்டாடத் தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

லிங்கா படத்தின் ரிலீஸ் மட்டுமல்ல இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் அல்ல! நாளை தங்களின் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதும் கூட இந்த கொண்டாட்டத்திற்கு கூடுதல் சிறப்பம்சம். ஏனெனில் ரஜினியின் பிறந்தநாளன்று அவரது திரைப்படம் ரிலீஸ் ஆவது இதுதான் முதன் முறை.

வடபழனியின் பூஜை

லிங்கா படத்தின் வெற்றிக்காக வடபழனி முருகன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தியாகராயநகர் ராகவேந்திரா ஆலயத்தில் கனகாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

வெற்றிபெறச்செய்வேண்டும்

இதனிடையே லிங்கா படத்தை வெற்றிபெறச் செய்வதற்காக ரஜினி மன்றங்களைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள் ரஜினி ரசிகர்மன்றங்களின் முன்னாள் பொறுப்பாளர் சத்யநாராயணாவும் இன்றைய பொறுப்பாளர் சுதாகரும்.

உங்கள் பொறுப்பு

ரஜினிகாந்த் மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் மன்றங்களைவிட்டு ஒதுங்கி இருக்கும் முன்னாள் பொறுப்பாளர்களிடமும் லிங்காவை வெற்றிப் படமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சத்யநாராயணாவும் சுதாகரும் பேசியிருக்கிறார்கள்.

தலைவரின் தரிசனம்

அப்போது பேசிய ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், தலைவர் எங்களைச் சந்தித்துப் பேசி வெகுநாட்களாகிவிட்டது. எனவே அவர் எங்களைச் சந்திக்க வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தினார்களாம். மேலும் விருப்பமிருந்தால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் விருப்பமில்லாவிட்டால் நற்பணி இயக்கம் தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் மன்ற பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

லிங்கா ரிலீஸ்க்கு பின்னர்

லிங்கா படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்து பேசுவார் என்று சத்தியநாராயணாவும், சுதாகரும் தெரிவித்துள்ளனர். இப்போதிருக்கிற சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் 32 மாவட்ட பொறுப்பாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. ரஜினி சந்திக்கும்போது இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்போம் என்கின்றனர் ரசிகர்கள்.

களை கட்டிய தியேட்டர்கள்

இந்த சந்திப்பில் 'லிங்கா' படத்தை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் தலைமை நிர்வாகிகளின் பேச்சும், ஆலோசனையும் அமைந்திருந்ததாம். தலைமையிலிருந்து அழைத்துப் பேசியிருப்பதால், கட் -அவுட்கள், தோரணங்கள், கொடிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் என பழைய உற்சாகத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். குடம் குடமாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யவும் தயாராக உள்ளனர்.

சென்னையில் திருவிழா கோலம்

சென்னையில் உள்ள மிக முக்கிய திரையரங்குகளான, சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, தேவிபாரடைஸ், தேவிகலா, எஸ்கேப், உட்லண்ட்ஸ், அபிராமி, மகாராணி, உள்ளிட்ட பல தியேட்டர்களிலும் லிங்கா படம் திரையிடப்பட உள்ளது. இதனால் இந்த தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்

காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சைதை ஜி. ரவி தலைமையில் கேக் வெட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மிகப்பெரிய விருந்து

எந்திரன் படத்திற்குப் பின்னர் லிங்கா படம் மூலம் மிகப்பெரிய விருந்து கொடுத்திருப்பார் சூப்பர் ஸ்டார் என்று நம்புகின்றனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்த போது பாலபிஷேகம், பால்குடம், மண்சோறு என நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர்கள் ஒருவழியாக மீண்டும் தங்கள் தலைவரை வெள்ளித்திரையில் பார்க்க தவமிருக்கின்றனர். தவமிருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன வரம் தரப்போகிறார்?.

 

Post a Comment