ஹைதராபாத்: சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு உடல் நலக் குறைவால் கவலைக்கிடமாக உள்ளார்.
78 வயதான ராமாநாயுடு, தெலுங்குத் திரையுலகில் பெரும் மதிப்புக்குரியவராகத் திகழ்பவர். தமிழில் மதுரகீதம், குழந்தைக்காக, தெய்வபிறவி, திருமாங்கல்யம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த வயதில் ஆரோக்கியமாக அனைத்து திரை நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த ராமாநாயுடுவுக்கு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு வெங்கடேஷ்பாபு, சுரேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார் வெங்கடேஷ். சுரேஷ்பாபுவின் மகன் தான் தெலுங்கு நடிகர் ராணா. ராமாநாயுடுவின் மகள் லட்சுமிதான் பிரபல நடிகர் நாகார்ஜுனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பியாக பதவி வகித்துள்ள ராமாநாயுடு, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment