சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

|

சென்னை: சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் கடன்காரனைப் போலப் பார்க்கிறார்கள் விஐபிக்கள் என்றார் இயக்குநர் பேரரசு.

புதுமுகங்கள் நடித்துள்ள பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

இதில், நடித்துள்ள சந்தோஷ் குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா, இயக்குனர் வி.டி. ராஜா, இசையப்பாளர்கள் ஆர்.ஆர்.கார்த்திக்-பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பேரரசு, கண்ணெதிரே தோன்றினாள் படத்தை இயக்கிய ரவிச்சந்திரன், சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த படத்தைப் போல் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் படங்களின் விழாக்களுக்கு வி.ஐ.பி.க்கள் வர மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதுபோன்ற படங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களை பட விழாவிற்கு அழைக்கச் சென்றால், கடன்காரர்களை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். உண்மையில் சினிமாவை நேசிப்பவர்கள் இம்மாதிரி சிறு முதலீட்டில் உருவான பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்.

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

வெற்றி என்பது யாருக்கும் நிலையானதல்ல. ஒரு படம் தோல்வி அடைந்தால், அந்த இயக்குனரின் சரக்கு தீர்ந்து விட்டது என்று வாழ்க்கையில் வெற்றி கண்டு இருப்பவர்கள் நினைப்பது தவறு. நாங்கள் ஒன்றும் மதுபானக் கடை சரக்கு அல்ல. நாங்கள் திரும்பவும் வெற்றி அடைவோம்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் ரசிக்கும்படியாக இருந்தது. நகைச்சுவை படத்திற்கான அனைத்து சிறப்பம்சமும் இந்த டிரெய்லரில் இருக்கிறது,'' என்றார்.

 

Post a Comment