தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெப்போலியன்!

|

திருநெல்வேலி: முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் தனது 51வது பிறந்த நாளை திருநெல்வேலி அருகே உள்ள மயோம்பதி மருத்துவமனையில் கொண்டாடினார்.

இப்போதைய நடிகர்களில் அடுத்தடுத்து பெரும் பதவிகளில் இருந்த பெருமை நெப்போலியனுக்கு மட்டும்தான் உண்டு. நடித்துக் கொண்டிருந்தபோதே வில்லிவாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். அடுத்து, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் எம்பியானார். தொடர்ந்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஆற்றல் மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் இணை அமைச்சரானார்.

தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெப்போலியன்!

பதவியிலிருந்த காலத்தில் எந்த சிறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் கவுரவம் காத்துக் கொண்டவர் நெப்போலியன்தான்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகியதுமே, அரசியலிலிருந்து முழுவதுமாக விலகிய நெப்போலியன், தசைச் சிதைவு நோய் பாதித்த தன் மகன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மகனின் நலன் கருதி அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இப்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார் நெப்போலியன். குடும்பம் அமெரிக்காவிலிருந்தாலும், படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் பலரும் அவரை அணுகி கதை கூறி வருகின்றனர். பொருத்தமான, கவுரவமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்துள்ளதால், தனக்கேற்ற கதைகளாகக் கேட்டு வருகிறார்.

கடந்த முறை தன் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நெப்போலியன், இந்த முறை தமிழகத்தில் கொண்டாடினார். இது அவருக்கு 51வது பிறந்த நாள்.

இந்த நாளை அவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லூரில் கட்டியுள்ள மயோபதி தசைத் திறன் குறைபாடு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மாவீரன் நெப்போலியன் ரசிகர் மன்றத் தலைவர் கவுரி சங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், நேர்முக உதவியாளர் பி சத்யா, நெல்லை மாவட்டத் தலைவர் காந்தி பாண்டியன், மதுரை பாலன், சேலம் ஆத்தூர் ஜோ, கடலூர் பாலு, தேனி ராஜ்குமார் ஆகியோர் நெப்போலியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நெப்போலியன் பிறந்த நாளையொட்டி மருத்துவமனையிலிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 

Post a Comment