சென்னை: விக்ரம் நடிப்பில் மிரட்டியுள்ள ஐ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் புதிய மைல் கல்லாகும்.
அவரது படம் ஒன்று முதல் முறையாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலைப் பார்த்துள்ளது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான படம் ஐ. படத்தை பார்த்தவர்கள் ஷங்கர் படத்திற்குரிய விஷயங்கள் இதில் இல்லை, படத்தை விக்ரம் தனது நடிப்பால் ஓட வைக்கிறார் என்றனர்.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் விக்ரமின் மிரட்டல் நடிப்பை பற்றியே பேசுகிறார்கள். ஐ படம் தமிழகம் தவிர கேரளாவிலும் நல்ல வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான முதல் வார இறுதியில் உலக அளவில் மொத்தமாக ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்று சினிமா வர்த்தக நிபுணர் த்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஐ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மனோகருடு என்ற பெயரில் ரிலீஸாகியுள்ளது. தெலுங்கில் ரிலீஸான அன்றே மனோகருடு ரூ.9 கோடி வசூல் செய்துள்ளது. டப் செய்யப்பட்ட ஒரு படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது மிகப் பெரிய விஷயம். இந்தியில் ஐ இதுவரை ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்றார்.
Post a Comment