சென்னை: விஜய் நடித்து வரும் 58வது படத்தின் தலைப்பு புலி என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக் நினைவுக்கு வருகிறது.
தொடர் தோல்விகளால் தடுமாற்றத்தில் விஜய் இருந்த நேரம் அது. அந்த சமயத்தில், விஜய்க்கு தமிழ் சினிமாவில் குஷி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படம்தான் விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்தை நோக்கி ஸ்திரமாக உயர்ந்தது. தனக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த படம் குஷி என்று விஜய்யே பலமுறை கூறியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யாவும், விஜய்யும், அப்பச்சன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் இணையத் திட்டமிட்டனர். படத்திற்குப் புலி என்று பெயர் வைத்தார் சூர்யா. ஆனால் திடீரென இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் விஜய். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இந்தப் படத்தின் திரைக்கதை வடிவமைப்பில் நடிகர் சிம்பு தலையிட்டதாகவும், இதை விஜய் விரும்பாமல் விலகிக் கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது.
அதன் பின்னர் தெலுங்கில் தனது புலியை வேறு பெயரில், வேறு விதமான கதையில் படமாக்கி ஹிட்டாக்கினார் சூர்யா. அதன் பின்னர் விஜய்யும், சூர்யாவும் இணையவில்லை. ஷங்கரின் நண்பன் படத்தில் நடிகர்களாக வந்து போயிருந்தார்கள். இடையில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தின் ஆடியோ ரிலீஸின்போது சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார்.
தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள்.
இப்படத்திற்கு மாரீசன், கருடா, போர்வாள், புலி எனப் பல்வேறான பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியில் புலி என்ற பெயரே சரியாக இருக்கும் எனப் படக்குழுவினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விஜய்யே நேரடியாக சூர்யாவிடம் பேசி டைட்டிலை தருமாறு கேட்டாராம். அதை உடனடியாக ஏற்றுக் கொண்ட சூர்யா, டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.
விஜய்க்காக டைட்டில்தானம் செய்வது சூர்யாவுக்கு இது முதல் முறையல்ல. இதற்குமுன் வில்லு என்ற டைட்டிலையும் எஸ்.ஜே.சூர்யா தான் வைத்திருந்தார் என்பதும் விஜய் கேட்டதால் அதை விட்டுக்கொடுத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தற்போது புலியையும் விட்டுக் கொடுத்துள்ளார்.. வில்லு கதி நேராமல் புலி வென்றால் சரிதான்!
Post a Comment