முட்டி மோதும் அஜித்-விஜய் ரசிகர்களை 'முஸ்தபா..' பாடவைக்க முயற்சிகள் தொடக்கம்!

|

சென்னை: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான வகையில் சண்டை போட ஆரம்பித்துள்ள நிலையில், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எந்த ஹீரோ உசத்தி என்று கூறிக்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள். ஜாலியாக போகும்வரை அந்த தகராறை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி டிவிட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர் இரு ஹீரோக்களின் ரசிகர்களும்.

முட்டி மோதும் அஜித்-விஜய் ரசிகர்களை 'முஸ்தபா..' பாடவைக்க முயற்சிகள் தொடக்கம்!

அகில இந்திய அளவில் டிரெண்ட் செய்வதில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் அஜித் ரசிகர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று விஜய் ரசிகர்களும், விஜயை விழுப்புரத்தில் ஓடியவர் என்றும், அடிமை என்றும், அஜித் ரசிகர்களும் ஹேஷ்டேக் செய்து டிவிட்டரில் மல்லுகட்டி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் பல கோடி பேர் பார்க்கும் டிவிட்டரில் இதுபோல தமிழக நடிகர்களின் மானத்தை ரசிகர்கள் கூவி விற்பனை செய்வதை பார்த்து சிலருக்கு மனசு பொறுக்கவில்லை. அதில் ஒருவர்தான், ரேடியோ ஜாக்கியான பாலாஜி. இவர், வடகறி உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

சவுண்ட்கிளவுட் மூலமாக ஆடியோ மெசேஜ் கொடுத்துள்ள பாலாஜி, தகாத வார்த்தைகள், குடும்பம் குறித்த வர்ணணைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்று இரு ஹீரோக்களின் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், யூடியூப்பில், அஜித்-விஜய் நட்பை மையப்படுத்தி ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற, நட்பை பற்றி உயர்வாக சொல்லும் பாடலான முஸ்தபா... முஸ்தபா பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது. இரு நடிகர்களுமே டிவி பேட்டிகளில் பரஸ்பரம் உள்ள மரியாதையை வெளிப்படுத்திய காட்சிகள் அந்த வீடியோவில் இணைக்கப்படுள்ளன.

இந்த வீடியோவ பார்த்துட்டாவது, இனிமேல், இரு தரப்பும் முஸ்தப்பா பாடுங்கப்பா.. உங்க அக்கப்போரு தாங்க முடியல...

 

Post a Comment