இப்பொழுது எல்லாம் படத்திற்கு தலைப்பு வைக்க ரூம் போட்டுதான் யோசிக்கிறார். ஒரு எழுத்தில் படத்திற்கு தலைப்பு வைக்கிறார்கள். இல்லை என்றால் நாலு வரிக்கு தலைப்பு வைக்கிறார்கள். அப்படி ஒரு படத்தலைப்புதான் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'
இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...? என்று யோசிக்கிறீர்களா? ஒரு படத்தில் வடிவேலுவை மக்களிடம் மாட்டி விடுவார் மாதவன். அவர் பொய் சொல்வதாக பொதுமக்களிடம் கூறுவார் வடிவேலு. அதற்கு ஒருவர், வடிவேலுவிடம் "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்று கூறுவார். இந்த வசனத்தையே படத்தலைப்பாக வைத்துவிட்டனர்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை இக்நைட் மற்றும் இனோஸ்டார்ம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விளம்பரம் மற்றும் வர்த்தக துறையில் இருந்த அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்குகிறார்.
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற இந்த தலைப்பு பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல, கதைக்கும் மிக பொருத்தமானது என்பதால் தான் இதை தலைப்பாக வைத்துள்ளோம் என்கிறார் இயக்குநர் அபநிந்திரன்.
நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன், சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம் தான் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.
நல்ல கதை அமைப்பும், நேர்த்தியான படபதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். இந்த படம் எல்லா தரப்பினரையும், வயதினரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் கூறுகிறார் இயக்குனர் அபநிந்திரன்.
சமீபகாலமாக நகைச்சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது இந்த வசனமும் தலைப்பாகியுள்ளது.
படம் மக்களை கவருமா பார்க்கலாம்.
Post a Comment