அரசு நிலத்தில் தியேட்டர் கட்டியதாக முன்னணி நடிகர் திலீப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவர் திருச்சூரை அடுத்த சாலக்குடியில் 3 தியேட்டர்கள் கொண்ட டி சினிமா என்ற மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.
திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், எனவே அரசு நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்தோஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "சாலக்குடியில் நடிகர் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் கொச்சி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது. 1964 - ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால் கடந்த 2006-ம் ஆண்டு இந்த இடத்திலிருந்து 92.9 சென்ட் நிலத்தை நடிகர் திலீப் வாங்கி உள்ளார்.
இது சட்டப்படி தவறு என அப்போதே நான் திருச்சூர் கலெக்டருக்கு புகார் மனு கொடுத்தேன். ஆனால் கலெக்டர் இது புறம்போக்கு நிலம் இல்லையென்று கூறி உள்ளார்.
ஆனால் இந்த இடம் அரசு நிலம்தான். அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் இந்த நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு விட வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Post a Comment