இளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்

|

இளையராஜாவின் இசை சாதனையை யாராலும் தொடக்க கூட முடியாது, என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

"ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து 1,000 படங்கள் என்ற மைல் கல்லைத் தாண்டியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பை பாலிவுட் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்

அமிதாப் பச்சன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவுக்கு இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமிதாப்பச்சன் தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விடியோ பதிவில், "இளையராஜா, 1,000 படங்களுக்கு மேல் இசை அமைத்த ஒரு இசை மேதை. ஒவ்வொரு படத்துக்கும் 5 பாடல்கள் என்றால் கூட மொத்தம் 5000 பாடல்கள். அவற்றில் 3,500 பாடல்களுக்கு மேல் மெகா ஹிட் கொடுத்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்.

இந்தப் புள்ளி விவரங்கள் உலக அளவில் வரலாற்றுக்குரிய ஒன்று. இளையராஜாவின் இசை சாதனையைத் தொடுவது மிகவும் கடினம். ஒரு இசையமைப்பாளர் தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள் என எல்லோரையும் ஈர்த்ததோடு, தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

வருகிற 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு "ஷமிதாப்' படக்குழுவினர் சார்பாக இளையராஜாவை வரவேற்கிறோம்," என அதில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment