ஆடியோ ரிலீஸுக்கு அனுமதி மறுப்பு.. ரசிகருக்கு கத்திக் குத்து: பவன் கல்யாண் பட விழாவில் பரபரப்பு

|

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் ரசிகர் ஒருவருக்கு கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு பட நடிகர் பவன் கல்யாணின் புதிய திரைப்படம் 'கோபாலா கோபாலா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது ரசிகர்களுக்கும் இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

ஆடியோ ரிலீஸுக்கு அனுமதி மறுப்பு.. ரசிகருக்கு கத்திக் குத்து: பவன் கல்யாண் பட விழாவில் பரபரப்பு

இதற்கென விழா அரங்கு வாசலில் நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டது. அப்போது ரசிகர் ஒருவர் தனது நண்பர்களுக்கும் நுழைவுச் சீட்டு வேண்டும் என தகராறு செய்துள்ளார். ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர், நுழைவு சீட்டுகளை விநியோகித்த ஸ்ரீனிவாஸ் என்ற உறுப்பினரை கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துள்ளார். காயமடைந்த ஸ்ரீனிவாஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்திய ரசிகரின் விபரம் ஏதும் தெரியவில்லை. தலைமறைவாக உள்ள தாக்குதல் நடத்திய அந்த ரசிகரைத் தேடி வருவதாக மாதாப்பூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் கே. நரசிம்மலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது

இந்த தாக்குதல் சம்பவத்தால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Post a Comment