பிகே திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துகிறது.. ஆமீர்கானுக்கு எதிராக போலீசில் புகார்!

|

ஜெய்ப்பூர்: ஆமீர்கான் நடித்து பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள திரைப்படமான 'பிகே', மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பிகே. வேற்றுகிரகவாசியாக பூமிக்கு வரும் கதாநாயகன் பாத்திரம், இந்தியாவில் பின்பற்றப்படும் மத சடங்குகளை கேலி செய்வதுபோலவும், கேள்வி கேட்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்து அமைப்புகள் இப்படத்திற்கு தடைகோரி போராட்டங்களை நடத்தி வருகின்றன.

பிகே திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துகிறது.. ஆமீர்கானுக்கு எதிராக போலீசில் புகார்!

இந்நிலையில் பசந்த் கெலாட் என்பவர் ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூரிலுள்ள பஜாஜ்நகர் காவல் நிலையத்தில் பிகே படம் தொடர்பாக ஒரு புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 295ஏ, 153ஏ ஆகிய பிரிவுகளின்கீழ், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மத உணர்வுகளை புண்படுத்துதல், இருவேறு மதப்பிரிவுகள் அல்லது இனங்களுக்கு நடுவே சண்டையை மூட்டுதல் ஆகியவை இந்த சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றச்செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

 

Post a Comment