மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

|

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது மனோரமாவிற்கு 72 வயதாகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இத்தகவல் வெறும் வதந்தி என மனோரமாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மனோரமாவின் பேரனான டாக்டர் ராஜா கூறுகையில், ‘பாட்டி நலமுடன் இருக்கிறார். வழக்கம் போல் மருந்துகள் எடுத்துக் கொண்டு அவரது பணிகளை தொடர்ந்து வருகிறார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment