திருவனந்தபுரம்: கேரளாவில் 'என்னை அறிந்தால்' திரைப்படம் சக்கைபோடு போட்டுவருவதால், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி நடித்து வெளியாக இருந்த ஃபயர்மேன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போயுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்து நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதுவரை மார்க்கெட் இல்லாத கேரளாவிலும் அஜித்துக்கு புதிய மார்க்கெட்டை அமைத்துக் கொடுத்துள்ளது.
முதல்முறையாக அஜித் திரைப்படம் ஒன்று கேரளாவில் 107 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள பெருமை என்னை அறிந்தால் மூலம் கிடைத்துள்ளது. 'என்னை அறிந்தால்' வெளியாகியுள்ள திரையரங்குகளில் புக்கிங் படுவேகமாக நடந்து வருகிறதாம். எனவே, இன்று வெளியாக இருந்த கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த ஃபயர்மேன் திரைப்படம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, லிங்கா மற்றும் ஐ திரைப்படங்களும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், என்னை அறிந்தால் வசூல் வேட்டையும், கேரள திரைப்பட கலைஞர்களை கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. கத்தி, ஜில்லா போன்ற விஜய் நடித்த திரைப்படங்களும் கேரளாவில் வரவேற்பை பெற்றவையாகும்.
Post a Comment