'லவ் யூ மருமகனே..' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்!

|

பெங்களூரு: கன்னடத்தின் முன்னணி இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் வெளியாக இருந்த திரைப்படத்தின் பெயரால் பெரும் சர்ச்சை வெடித்தது. எனவே டைட்டிலை மாற்றியுள்ளார் இயக்குநர்.. ஆனால் அதைவிட மோசமாக.

"லவ் யூ மருமகனே" என்று ஒரு படத்தின் போஸ்டரை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? 'மாமனாரின் இன்ப வெறி' க்கு போட்டி படம் போலும் என்றுதானே எண்ணம் ஓடும்.

ஆனால் இப்படி ஒரு படத்தை எடுப்பது முன்னணி இயக்குநர் என்று தெரியவந்தால்... ஐயஹோ..., நல்லா இருந்தவராச்சே, இப்படி 11 மணி காட்சி படங்கள் எடுக்கும் நிலைக்கு போயிட்டாரே என்று பச்சாதாபமும் சேர்ந்து தோன்றும்.

'லவ் யூ மருமகனே..' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்!

சிலருக்கோ, படம் பெயரை பார்.. கலாச்சாரத்தை சீரழித்துவிடுவார்கள் போல இருக்கிறது.. என்று அறச்சீற்றமும் எழும். இப்படி ஒரு நெருக்கடியைத்தான் சந்தித்துள்ளார் கன்னட முன்னணி இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ்.

முன்னணி நடிகர் ரவிச்சந்திரன், பூமிகா நடிக்க, லங்கேஷ் எடுத்துவரும் படத்துக்கு வைத்திருந்த பெயர் 'லவ் யூ ஆலியா' (Love You Alia). இதில் எங்கு மருமகன் வருகிறது என்று கேட்கிறீர்களா. ஆலியா என்பதை அலியா என்று படித்தால், கண்டிப்பாக வரும். ஆம்.. கன்னடத்தில் 'அலியா' என்றால் மருமகன் என்பது பொருளாகும். லங்கேஷின் துரதிருஷ்டம், படத்தின் போஸ்டரை பார்த்த பலரும் ஆலியா என்று வாசிப்பதற்கு பதிலாக அலியா என்றுதான் வாசித்துள்ளனர்.

நண்பர்களும், நலம் விரும்பிகளும் போன் போட்டு, திட்டாத குறையாக குமுறியுள்ளனர் லங்கேஷிடம். மனிதருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். அதன்பிறகுதான், அவுச்.. என்று நாக்கை கடித்துள்ளார் லங்கேஷ். எடுத்தார் பார்க்கலாம் ஒரு ஓட்டம்... நேரே கர்நாடகா ஃபிலிம் சேம்பரில் சென்றுதான் ஓட்டத்தை நிறுத்தியுள்ளார்.

படத்தின் பெயரை மாற்றத்தான் அவர் அப்படி ஓடினார். ஆனால் பெயரை மாற்றவில்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா... ஆம், எதை எல்லோரும் கிண்டல் செய்தார்களோ அதையே படத்தின் தலைப்பாக மாறிவிட்டார்.

இப்போது படத்தின் பெயர் Love You Aliya. ஒரு ஒய் மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துள்ளார். இப்போது யாரும் தப்பாக புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் படத் தலைப்பே தப்பான அர்த்தத்தில்தான் உள்ளது. ஆலியா என்றால்தானே ஆளுக்கொரு அர்த்தம் சொல்கிறார்கள், எனவே, அலியா (மருமகன்) என்றே மாற்றிவிட்டாராம் லங்கேஷ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "திரைப்படத்தில் மாமனார்-மருமகன் இடையேயான உறவு முக்கியத்துவம் தந்து காட்டப்பட்டுள்ளது. எனவே 'லவ் யூ மருமகனே (அலியா)' என்ற வார்த்தை படத்தோடு பொருந்தி போய்விடும். எதேர்ச்சையாக அமைந்த சர்ச்சை எனது படத்திற்கு நல்ல தலைப்பை பெற்றுக் கொடுத்துவிட்டது" என்றாரே பார்க்கலாம். ஏற்கனவே முத்தேகவுடா என்று ஒரு படத்திற்கு பெயரை சூட்டப்போக, மாஜி பிரதமர் தேவகவுடாவை கிண்டல் செய்கிறார் என்று மஜதவினர் கொதித்த கதையெல்லாம் லங்கேஷ் திரையுலக வரலாற்றின் மைல் கல்லாகும்.

இப்போ பிரச்சினை என்னன்னா... மருமகன், மகளோடு படத்துக்கு செல்லும் மாமியார்கள், எந்த படத்துக்கு போறீங்கன்னா 'லவ் யூ மருமகனுக்கு' போறேன் என்று சொல்ல வேண்டிவந்துள்ளதே என்பதுதான். இதற்காகவே களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர், கர்நாடக கலாச்சார காவலர்கள். இனி ஒரே சரவெடிதான் போங்க..

 

Post a Comment