விஜய சேதுபதி நடித்து தயாரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை படப்பிடிப்பை நேற்று முன்தினம் பார்வையிட்டார் இளையராஜா.
தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த லெனின் பாரதி என்பவர் ‘மேற்கு தொடர்ச்சி மலை' என்ற பெயரில் புதிய திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.
இந்த புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கிறார். இதில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இளையராஜாவின் சொந்த ஊரான தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று பண்ணைப்புரம் கிராமத்தின் தெருக்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.
அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா திடீரென வருகை தந்தார். இதனை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இளையராஜாவை வரவேற்றனர்.
படப்பிடிப்பு குறித்து படக்குழுவினருடன் சுமார் அரை மணி நேரம் இளையராஜா பேசினார். பின்னர் படப்பிடிப்பு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இளையராஜா புறப்பட்டுச் சென்றார்.
Post a Comment