மனோபாலா தயாரிக்கும் பாம்பு சட்டை இன்று ஆரம்பம்

|

மனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் பாம்புச் சட்டை படம் இன்று தொடங்கியது.

ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு அதிகம் தேடப்படும் நடிகராகிவிட்டார் பாபி சிம்ஹா. உறுமீன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதில் மனோபாலா தயாரிப்பில் ‘பாம்பு சட்டை' என்னும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

மனோபாலா தயாரிக்கும் பாம்பு சட்டை இன்று ஆரம்பம்

இப்படத்தை ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

இதில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மனோபாலா கூறுகையில், ‘எனது முதல் தயாரிப்பான ‘சதுரங்க வேட்டை' திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களைக் கவரும் வண்ணம் அடுத்த தயாரிப்பும் இருக்க வேண்டும், நல்ல படங்களை தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்று எண்ணினேன்.

ஆடம் தாசன் இந்த கதையை கூறிய உடனே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்தேன். இன்று முதல் இப்படத்தின் படப்பதிவு தொடங்கவுள்ளது.

"கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் மக்களைக் கவர்ந்துள்ள பாபி சிம்ஹா இப்படத்திற்கு பெரும் பலம். ‘பாம்பு சட்டை' சிம்ஹாவின் ஆற்றல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானத்தின் உண்மையான அடையாளத்தையும் வெளிபடுத்தும்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் ‘தாமிரபரணி' புகழ் பானு இப்படத்தில் நடிக்கிறார். கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும். வெவ்வேறு திறமைகளின் கூட்டணியான இந்த பாம்பு சட்டை பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும்," என்றார்.

 

Post a Comment