சினிமா என்றவுடனே தப்புத் தப்பாக கணக்குப் போட்டு படமெடுத்து, தப்பாகவே முடிந்து போகிறார்கள் இன்றைய நாட்களில்.
ஆர்வக் கோளாறு காரணமாக ஏதாவது சாதனை செய்வதாகக் கூறி, அவசர கோலத்தில் எதையாவது எடுத்து வைப்பார்கள்.
இந்த நிலை இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. 11 மணி நேரத்தில் ஒரு முழுப் படத்தையும் எடுத்திருப்பதாக ஒரு குழு வந்திருக்கிறது. படத்துக்கு தலைப்பு: தப்பா யோசிக்காதீங்க.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் ஒரு வீட்டில் வைத்து படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம்.
நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு -எஸ்.ஆர். வெற்றி , இசை- ஸ்டீபன் சதீஷ்.
'தென்றல்' தொடரில் நடிக்கும் ராஜாதான் நாயகன். ஜோதிஷா, சனிலா நாயகிகள். சிசர் மனோகர், பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுல்தான்ஸ் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஏவிஎம்மின் 13 தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சுல்தான் கூறுகையில், ''ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தப்படும்போது சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் சமாளிக்க எதைக் கையாள்கிறான் என்பதை படம் விளக்கும். இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்,'' என்றார்.
11 மணி நேர படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது "இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன.
இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவர்க்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப் படும். இதில் 2பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம்," என்றார்.
தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் " இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பினேன். செய்து காட்டி விட்டார்." என்றார்.
Post a Comment