சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள காக்கி சட்டை கலவையான விமர்சனங்களுடன், ஓட்டத்தில் சற்றே மந்தப்பட்டாலும், அவரது அடுத்த படத்துக்கான வர்த்தகம் குறித்து வெளியாகும் தகவல்கள் கோடம்பாக்கத்தை வாய் பிளக்க வைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்த படம் ரஜினி முருகன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தந்த பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஏகத்துக்கும் சம்பளம் கேட்ட சிவா, கதையைக் கேட்ட பிறகு அமைதியாக ஒப்புக் கொண்டாராம். வெற்றிப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த கதையாம்.
இப்போது ஷூட்டிங்கெல்லாம் முடிந்து, மே மாதம் வெளியாகத் தயாராக உள்ள நிலையில், படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. ரூ 40 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமாவின் பரபரப்பான சமாச்சாரமாகப் பேசப்படுகிறது.
எட்டுப் படங்களில்தான் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்குள் அவரது படம் ஒன்றின் வர்த்தகம் ரூ 40 கோடிக்கு நடந்திருப்பது சாதாரண விஷயமா என்ன?
ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், பரோட்டா சூரி, சமுத்திரக்கனி நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். படத்தை திருப்பதி பிரதர்ஸுடன் இணைந்து ஈராஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment