தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகை ஜெயசுதாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தல் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவுடன் நடிகர் ராஜேந்திரபிரசாத் மோதுகிறார்.
ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால் போட்டியில் இருந்து விலகி விட்டார்.
அவர் ஜெயசுதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு அணியினரும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி ஜெயசுதாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர்.
அவர்களுக்கு முன்பே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதிலிருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. போட்டியிலிருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள்.
இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்- நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்," என்றார்.
Post a Comment