சென்னை: படப்பிடிப்பில் தொல்லை கொடுப்பதாக நடிகர் வினய் மீது சேர்ந்து போலாமா படத் தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் கொடுத்துள்ளார்.
உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் வினய். இவர் தற்போது அனில்குமார் இயக்கும் ‘சேர்ந்து போலாமா' படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக மதுரிமா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. படம் முடிந்து, வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வினய் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், "சேர்ந்து போலாமா' படத்தின் முழு படப்பிடிப்பும் நியூசிலாந்தில் நடந்தது. இதற்காக வினய், மதுரிமா மற்றும் படக் குழுவினரை நியூசிலாந்து அழைத்துச் சென்றிருந்தேன். பேசியபடி சம்பளத்தின் ஒரு பகுதியை வினைக்குக் கொடுத்து விட்டேன். மீதித் தொகையை படப்பிடிப்பு இறுதி நாளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில் வினய் திடீரென தனக்கு ரூ.17 லட்சம் வேண்டும் என்றார். எனது வங்கி கணக்கில் உடனடியாக இந்த பணத்தை போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என பிளாக்மெயில் செய்தார். ஒன்றரை நாட்கள் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவிடம் இதுபற்றி புகார் செய்தேன். அவர் தலையிட்டதன் பேரில் மீண்டும் நடித்தார். சிவா தலையிடாவிட்டால் இந்த படமே வந்து இருக்காது. வளரும் நடிகரான வினய் தயாரிப்பாளருக்கு இதுபோல் தொல்லை கொடுப்பது சரியல்ல.
நிறைய தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதால்தான் முன்கூட்டி பணத்தை கேட்கிறேன் என்று சொல்லி ஆடம்பிடித்தார். நியூசிலாந்தில் அவருக்கு ‘பிஎம்டபிள்யூ' கார் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதில் தினமும் ஜாலியாக சுற்றினார். படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார்," என்றார்.
Post a Comment