மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள ‘ஓ காதல் கண்மணி' படத்தின் தமிழக விநியோக உரிமையைப் பெற்றது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்.
துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி-க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.சி.ஸ்ரீராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என்பார்கள். அலைபாயுதே படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.
இதனிடையே படத்தின் முதல் டீசர் இணையதளத்தில் வெளிவந்து, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியாகிய 2 நாட்களுக்குள் டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வாங்கியுள்ளது.
சமீபத்தில் இதே நிறுவனம் தான் ‘ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் வாங்கியது. இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஓ காதல் கண்மணி' ஏப்ரல் மாதத்திலும், ‘ரஜினி முருகன்' மே மாதத்திலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment