தமிழ் - தெலுங்கில் நாகார்ஜூனா, கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் நடிகர் சிவகுமார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, தமிழ் நடிகர் கார்த்தி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். வம்சி இயக்கும் இந்த இரு மொழிப் படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பூஜையுடன் தொடங்கிய இந்த படப்பிடிப்பை கார்த்தியின் அப்பாவும், நடிகருமான சிவகுமார் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கார்த்தி பேசுகையில், "நான் சிறு வயதிலிருந்தே ரசித்து பார்த்த நாகர்ஜூனாவிடம் இணைந்து நடிப்பது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை நாட்களாக ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்துப் போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்றார்.
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Post a Comment