லிங்காவுக்காக ரஜினி கொடுத்த பணத்தை பிரிப்பதில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதன் விநியோகஸ்தர்களில் ஒரு குழுவினர்.
இதுகுறித்து லிங்கா' படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் மன்னன், வட, தென் ஆற்காடு விநியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை விநியோகஸ்தர் ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
லிங்கா படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவுக்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவுக்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவுக்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் அறிவுறுத்தல் பேரில் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 12.5 கோடி ரூபாயை நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டார்.
நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்று தர சங்கங்களை அணுகியபோது யாரும் ஆதரவு தரவில்லை. தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றதும் பங்கு போட்டு தருவதாக கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் புரியவில்லை.
இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி தான் தோன்றித்தனமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.
ரஜினி நடித்த பல படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர் திருப்பூர் சுப்பிரமணி. பாபா படத்தில் இழப்பு என்றதும் அசலுடன் லாபமும் கேட்டு பெற்றார். ஆனால் லிங்கா விஷயத்தில் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.
விநியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை இவர் நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். ராக்லைன் வெங்கடேஷ் பணத்தை ஏரியா வாரியாக பிரித்து கொடுத்தால்தான் பிரச்சினை முடியும். மாறாக கட்ட பஞ்சாயத்து நடந்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment