பெங்களூரு : நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா டைரக்டருமான எஸ்.சித்தலிங்கய்யா காலமானார். அன்னாரது உடலுக்கு முதலமச்சர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
‘மேயர் முத்தண்ணா‘, ‘பங்காரத மனுஷ்ய‘ மற்றும் ‘பூதய்யனு மக அய்யு‘ உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79). இவர் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் தந்தை ஆவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சித்தலிங்கய்யா, சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சித்தலிங்கய்யாவின் உடல் உறுப்புகள் செயலிழந்தன. சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், "பன்றி காய்ச்சல் பாதிப்பில் இருந்து சித்தலிங்கய்யா குணம் அடைந்தார். ஆனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்தார்" என்றர்.
இவரது இயக்கத்தில், நடிகர் ராஜ்குமார் நடித்திருந்த சமூக விழிப்புணர்வு கதையம்சம் கொண்ட ‘பங்காரத மனுஷ்ய‘ படம் பெங்களூருவில் ஒரு திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. இவர் ‘புட்டண்ண கனகல்' விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தலிங்கய்யா தமிழ்ப் படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.
அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சித்தலிங்கய்யாவின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கன்னட திரை உலகத்தை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சித்தலிங்கய்யாவின் பேரனும், நடிகர் முரளியின் மகனுமான அதர்வா, தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment