ரஜினிக்கு எதிரான பிச்சைப் போராட்டம் வாபஸ்!

|

லிங்கா பட விவகாரத்தில் ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கப் போவதாகக் கூறிய விநியோகஸ்தர்கள், ரஜினி பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் அந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்து அந்தப் படத்துக்கு எதிராகவும், அதன் நாயகன் ரஜினிக்கு எதிராகவும் பலவிதமான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அந்தப் படத்தை சில பகுதிகளில் வெளியிட்டவர்கள்.

சில அரசியல் தலைவர்களின் துணையோடு உண்ணாவிரதம் நடத்தியவர்கள், பின்னர் பிச்சைப் போராட்டம் அறிவித்தனர். படத்துக்கு வரிச்சலுகை அளித்ததற்கு எதிராக வழக்கும் போட்டனர்.

ரஜினிக்கு எதிரான பிச்சைப் போராட்டம் வாபஸ்!

இந்த நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, நஷ்டம் என்று கூறியவர்களுக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

இதனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவிடம் அவர் ஒப்படைத்து பிரச்சினையை முடிக்குமாறு கூறினார்.

20 நாட்களுக்கு முன்பே இந்தத் தொகை தரப்பட்டும், அந்தத் தொகையை எப்படி பிரித்துக் கொள்வது என்பதில் சம்பந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் மத்தியில் பெரிய சண்டை ஏற்பட்டுள்ளதால் பிரச்சினை முடிவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் இதனை வெளியில் சொல்லாமல், மீண்டும் பிச்சைப் போராட்டத்தை நேற்று அறிவித்து மீடியாவில் விளம்பரம் தேடி வந்தனர் இந்த விநியோகஸ்தர்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடந்த உண்மையை நேற்று கலைப்புலி தாணு ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார்.

இதைத் தொடர்ந்து, லிங்கா பிரச்சினை சுமூகமாக முடிந்ததாகவும், ரஜினிக்கு எதிராக அறிவித்த பிச்சைப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அந்த விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

போராட்டம் வாபஸ் ஓகே... வழக்கை எப்படி வாபஸ் பெறப் போகிறார்கள்?

 

Post a Comment