சென்னை: ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டா நிறுவன வியாபாரமும். என்ன, இங்கு நாங்கள் வானத்தையே உங்களிடம் விற்கப் போகிறோம், என்றார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.
பாஃப்டா திரைப்பட கல்வி அகாடமியின் தொடக்கவிழா நேற்று மியூசிக் அகாடமியில் நடந்தது. இந்த நிறுவனத்தில் மூத்த ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார் பார்த்திபன்.
தொடக்க விழாவில் இயக்குநர் ஆர் பார்த்திபன் பேசுகையில், "இங்கே படிக்க வரும் நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பெரும் சாதனையாளர்களிடமிருந்து கற்கப் போகிறீர்கள்.
ஒரு விதத்தில் 500 கிமீ தூரத்தில் இருக்கும் இடத்தைக் காட்டி, மீனம்பாக்கத்துக்கு மிக அருகில் சகல வசதிகளுடன் வீட்டுமனை என்று விற்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டாவும். என்ன.. அவர்கள் நிலத்தை விற்பார்கள்.. நாங்கள் வானத்தையே உங்களுக்கு விற்கிறேோம்.
பொதுவாக குழந்தைகள் 60 மார்க் வாங்குவது அம்மாக்களால்தான். ஆனால் அம்மாக்கள் தலையிடாவிட்டால் 90 மார்க் வாங்குவார்கள். அந்த அம்மாக்களைப் போலத்தான் நாங்கள் இங்கே, இந்த பாஃப்டாவில்.
பொதுவாக வெளியிலிருந்து வரும் நீங்கள் எல்லாம் புதிய விஷயங்களுடன் வருவீர்கள். அதை கட்டணமில்லாமல் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம். நீங்கள் பீஸ் கொடுத்து கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அவ்வளவுதான்," என்றார்.
Post a Comment