திருச்சூர்: கேரளாவில் உள்ள தனது பங்களாவுக்கு மின்சாரம் திருடிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கலாபவன் மணி. அவருக்கு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருவி அருகே பங்களா ஒன்று உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர் அந்த பங்களாவில் தான் ஓய்வெடுப்பார். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு மின்சாரம் திருடப்படுவதாக பொதுமக்கள் மின்வாரியத்திடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மின்வாரியத் துறை அதிகாரிகள் சிறப்புக் குழு கலாபவன் மணியின் பங்களாவில் சோதனை நடத்தியது. சோதனையில் பல ஆண்டுகளாக மின்சாரம் திருடப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலாபவன் மணிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் திருடியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பங்களாவுக்கு மின்சாரம் திருட உதவியாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் கலாபவன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment