சென்னை: தமிழ்ப் படம் தயாரிப்பது இப்போதெல்லாம் தற்கொலைக்கு சமமாகிவிட்டது, என்று இயக்குநர் நாஞ்சில் பி சி அன்பழகன் கூறினார்.
நதிகள் நனைவதில்லை என்ற படத்தை அவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நதிகள் நனைவதில்லை' என்ற படத்தை தயாரித்து இயக்கினேன். இப்படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் தரமான படம் என பாராட்டுகிறார்கள்.
எனக்குச் சொந்தமான வீட்டை விற்றுதான் இந்த படத்தை தயாரித்தேன். இன்னொரு வீட்டை விற்று ரிலீஸ் செய்தேன். மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தான் இதை செய்தேன்.
ஆனால் எனது ‘நதிகள் நனைவதில்லை' படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கி விடும்படி திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். படம் பார்த்தவர்கள் நல்ல படம் என வாய்மொழியாக விளம்பரம் செய்த பிறகே கூட்டம் வரும்.
இரண்டு வாரங்கள் ஓடினால்தான் அது நடக்கும். அதற்கு கூட அவகாசம் தரவில்லை. 2-ந் தேதி பெரிய நடிகர் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த படங்களுக்கு எல்லா தியேட்டர்களும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களை தூக்கி விட்டு அந்த தியேட்டர்களையும் தங்களுக்கு தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். சிறு பட்ஜெட் பட அதிபர்கள் வாழ வேண்டாமா? ஆபரேசன் தியேட்டர் தவிர எல்லா தியேட்டர்களிலும் தங்கள் படங்கள்தான் ஓட வேண்டும் என்று பெரிய பட தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டுவது நியாயம்தானா? படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமம் என்பது போல் ஆகி விட்டது.
சிறுபட்ஜெட் படங்களை பெரிய தியேட்டர்களில் காலை காட்சி மட்டுமே திரையிட அனுமதி தருகிறார்கள். காலை காட்சி படம் பார்க்க யாரும் வருவது இல்லை. சிறுபட்ஜெட் படங்கள் 2 வாரங்கள் ஓட வழி வகை செய்ய வேண்டும்.
திரையுலகில் நடக்கும் இந்த அவலங்கள் தெரியாமல் புதிதாக நிறைய பேர் படம் எடுக்க வந்து பணத்தை இழந்து பிச்சைக்காரர்களாகிறார்கள். தயவு செய்து யாரும் படம் எடுக்க வராதீர்கள். இருக்கிற சொத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment