என் ரூம்ல இவ தங்குவா.. நானும் தங்குவேன்.. கல்யாணம் ஆகலை... ஓஹோ.. காதல் கண்மணி!

|

சென்னை: அலைபாயுதேவில் தாலி கட்டிக் கொண்டு காதலர்கள் தனித்தனியாக வாழலாம் என்று கற்றுக்கொடுத்த இயக்குநர் மணிரத்னம், ஓ காதல் கண்மணி படத்தில், தாலி கட்டாமல் ஒன்றாக வாழலாம் என்று சித்தரித்துள்ளார். இதனால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் 2000மாவது ஆண்டில் வெளியாகி, இளைஞர்களிடம் டிரெண்ட் செட்டராக மாறிய திரைப்படம் அலைபாயுதே.

என் ரூம்ல இவ தங்குவா.. நானும் தங்குவேன்.. கல்யாணம் ஆகலை... ஓஹோ.. காதல் கண்மணி!

இப்படத்தின் நாயகிக்கு, நாயகன் ரிஜிஸ்டர் ஆபீசில் வைத்து தாலி கட்டிவிடுவார். ஆனால், காதலர்கள் தங்களது வீடுகளிலேயே தனித்தனியாக வாழ்வார்கள். இந்த படம் ரிலீசான பிறகு, நிறைய காதலர்கள், அந்த பாணியில் தாலி கட்டிக் கொண்டனர். இதனால், ஊடகங்களில் 'அலைபாயுதே' பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி என்று தலைப்பு போட்டு செய்தி வெளியிடும் நிலை உருவானது.

இதன்பிறகு தனது வழக்கமான முத்திரையை பதிக்க முடியாமல் இருந்த மணிரத்னம், இதோ, இன்று மீண்டும் ஒரு சர்ச்சை சப்ஜெக்டோட களமிறங்கியுள்ளார் மணிரத்னம். இப்போது தாலியே இல்லாமல் குடித்தனம் நடத்த வைத்துள்ளார் மணிரத்னம்.

திருமணத்தில் விருப்பமில்லாத ஹீரோ, ஹீரோயின்கள், ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதராக வாழ்வதாக ஓ காதல் கண்மணி படத்தில் காட்டியுள்ளார் மணிரத்னம். அதையும் மிக சாதாரணமாக ஜோடிகள் எடுத்துக்கொள்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி தாம்பத்தியமும் அரங்கேறுகிறது.

அலைபாயுதே தாலி பாணியில், வருங்காலத்தில் இதேபோல லிவ்விங் டு கெதர் சர்வ சாதாரணமாக போக, இந்த படம் ஒரு டிரெண்ட் செட்டராக மாற வாய்ப்புள்ளது. இதனாலேயே, படம் எதிர்ப்புக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது. லிவ்விங் டு கெதர் நடக்கவில்லையா, அதைத்தானே காட்டியுள்ளோம் என்று படைப்பாளி கேட்கலாம், ஆனால், எங்கோ ஓரிரு இடங்களில் நடப்பதை, பொதுவில் காண்பித்தால், அது பெரும்பாலானோரின், குற்ற உணர்ச்சியை அறுந்து போக செய்யும் என்பதை படைப்பாளிகள் உணர வேண்டாமா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, ஓ காதல் கண்மணியின் ஒரு டயலாக் இதோ:

"அப்பா, என் ரூம்ல இவ தங்கறா"

"அப்போ நீ?"

"நானும் அங்கயேதான் தங்குவேன்"

"ஓ...மேரேஜே பண்ணியாச்சா?"

"இல்ல..அதுல நம்பிக்கை இல்ல"

 

Post a Comment