புறம்போக்கு... இது ஒரு தலைப்பா... ஒரு மாதிரி இருக்கே.. என்று கொஞ்சம் ஃபீல் பண்ணவர்களுக்காக ஒரு மாற்றத்தை தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.
படத்துக்கு இப்போதைய தலைப்பு: புறம்போக்கு என்கிற பொதுவுடைமை!
எஸ்பி ஜனநாதன் இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள்.
தனது முதல் படமான ‘இயற்கை' மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற ஜனநாதன், தனது அடுத்தடுத்த படங்களான ‘ஈ' மற்றும் ‘பேராண்மை' மூலம் மக்களுக்கான இயக்குநராகப் பரிமாணம் எடுத்தார்.
வேகமாக அதிகப் படங்கள் பண்ண வேண்டும் என்ற நினைப்பில்லாத இயக்குநர் இவர். பேராண்மை என்ற வெற்றிப் படம் தந்த பிறகும், நான்காண்டுகள் கழித்துதான் இப்போது புறம்போக்கு எனும் பொதுவுடைமை வருகிறது.
இந்தத் தலைப்பு மாற்றம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், "குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு'என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது.
‘புறம்போக்கு' என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாகப் பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.
புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல. மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.
இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு புறம்போக்கு நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே... எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமைதான்.
குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை' என்று தலைப்பு வைக்கப்பட்டது," என்றார்.
இந்த மாதம் இசையையும், வரும் மே முதல் தேதி பட வெளியீடும் இருக்கும் என்றார் மேலும் அவர்.
Post a Comment