மும்பை: அட்சய திரிதியை தினமான நேற்று பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயின் மனைவி பிரியங்காவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.
கர்நாடக மாநில அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகளான பிரியங்கா ஆல்வாவை கடந்த 29-10-2010 அன்று விவேக் ஓபராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விவான் வீர்ஒபராய் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார் விவேக் ஓபராய்.
இந்த தகவலையறிந்த பாலிவுட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் செல்போன் மூலமாகவும் ஃ பேஸ்புக், ட்விட்டர் மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவை முதன்முறையாக சுனாமி தாக்கியபோது சென்னையில் தங்கியிருந்த விவேக் ஓபராய், அப்போது தமிழக மக்களுக்கு 6 லாரி நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து உதவி செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அந்த கிராம மக்களின் புனர்வாழ்வுக்கு ஏராளமான பணத்தை செலவழித்து பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தந்தார்.
புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான உலக சுகாதார மையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றிவரும் விவேக் ஓபராய், தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை மற்றும் மும்பையில் பல்வேறு சமூகச் சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment