சென்னை : என்னை அறிந்தால் வெற்றிப்படமானதைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்தடுத்தப் பட வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குநர் கௌதம்மேனன்.
முதலாவதாக சிம்பு நடிக்கும் காதல் கதை. படத்திற்கு அச்சம் என்பது மடமையடா எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிம்பு - கௌதம் காம்பினேஷனில் தயாராகும் இந்தப் படம் இன்னொரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா'வாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சிம்பு படத்தை முடித்து விட்டு விக்ரம், நயன்தாரா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்' படத்தை இயக்குகிறார் கௌதம். இப்படம் போலீஸ் கதையாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேற்கூறிய இரண்டு படங்களையும் முடித்தவுடன் விஷாலை இயக்கத் திட்டமிட்டுள்ளார் கௌதம். சமீபகாலமாக ஆக்ஷனில் வெளுத்து வாங்கி வரும் விஷாலை வைத்து, மென்மையான காதல் கதையை இயக்க கௌதம் திட்டமிட்டிருக்கிறாராம்.
இதற்கிடையே மீண்டும் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் இயக்கும் ஐடியாவிலும் கௌதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எப்படியோ போலீஸ் கதை, காதல் கதை என மாற்றி மாற்றி சலிப்பு தட்டாமல் ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் கௌதம் என்பது மட்டும் உறுதி.
Post a Comment