சென்னை: கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்தது.
விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘என் உதிரத்தின் விதை' என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்' என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.
இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செலுத்தி, அவற்றை வழிபடுவது வழக்கம். இந்து மத கடவுள், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளனர். இவற்றை எல்லாம் அவமதிக்கும் விதத்தில், இந்த பாடல்கள் உள்ளன.
எனவே, இந்த என் உதிரத்தின் விதை என்று தொடங்கும் பாடலில், வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று திரைபட தணிக்கை வாரியத்தின் தலைவர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6-ந் தேதி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில், வருகிற மே 1-ந் தேதி 'உத்தமவில்லன்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'உத்தமவில்லன்' படத்தை செய்ய முடியாது என்று உத்தரவிட்டு, தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
Post a Comment