திருவாரூர்: செம்மர கடத்தலில் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர் என்று வலங்கைமானில் நடிகர் சரவணன் கூறினார்.
சினிமா நடிகரும், அ.தி.மு.க. பேச்சாளருமான சரவணன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலுக்கு தனது மனைவி சூர்யாஸ்திரியுடன் வந்து சாமி கும்பிட்டார்.
பின்னர் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வலங்கைமானில் நடிகர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில்,"தற்போது முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருகிறேன். பலதரப்பு ஆதரவுடன் இருக்கும் எனக்கு செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது பெயரை கொண்ட வேறொரு நடிகருக்கு தொடர்பு இருந்ததால் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர்.
அ.தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராகவும், பொறுப்பு மிக்க கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். சமுதாய அக்கறை உள்ளவராகவும் இருந்து வருகிறேன். நான் செம்மர கடத்தலில் ஈடுபட எந்த சாத்திய கூறுகளும் இல்லை. தற்போது மாணவர்கள், இளைஞர்களிடையே ஒழுக்கம் இல்லை
இளைஞர்கள் சினிமா நடிகர்களை ரோல் மாடலாக நினைப்பது ஆபத்தானது. எந்த ஒரு நடிகரையும் இளைஞர்கள் பின்பற்ற கூடாது. சினிமாக்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே நினைக்க வேண்டும். சினிமாக்களில் இடம்பெறும் நல்ல தகவல்களை வாழ்க்கையில் பின்பற்றலாம்" என்று தெரிவித்தார்.
Post a Comment