சென்னை: சென்சார் சான்று வழங்கிய பிறகு எந்தப் படத்தையும் எதிர்க்கும் உரிமை தனிநபருக்கு இல்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.
கொம்பன் படத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் சில களமிறங்கியுள்ள சூழலில், படத்துக்கு ஆதரவாக திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து கொம்பன் விவகாரம் குறித்துப் பேசினர்.
அப்போது சரத்குமார் கூறுகையில், "படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது?
மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.
எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.
பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து," என்றார்.
Post a Comment