‘யுனிவர்சிட்டி', ‘திருட்டுப்பயலே', ‘நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜீவன்.
இவர் நடிப்பில் கடைசியாக ‘நான் அவன் இல்லை-2' படம் வெளிவந்தது. இந்த படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து, தனது சொந்த தொழிலை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாடு போய்விட்ட, ஜீவன் தற்போது மீண்டும் திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
‘மாயி', ‘திவான்', ‘மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் ஜீவன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அதிபர் என்று தலைப்பிட்டுள்ளனர்.
இவருடன் சமத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், கோவை சரளா, மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் ‘சிவா' என்ற கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்' கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
Post a Comment