கலிபோர்னியாவில் நடக்கும் ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா பங்கேற்பு

|

கலிபோர்னியா: வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) நடத்தும் தமிழ் விழாவில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொள்ள உள்ளார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 அதாவது 28வது ஃபெட்னா வருடாந்திர கூட்டம் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடக்க உள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்கும் ஃபெட்னா தமிழ் விழா

இந்த தமிழ் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் இருக்கும் நேஷனல் சிட்டி சிவிக் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் விழாவோடு சேர்த்து இசைப் பேரறிஞரர் வீ.ப. கா. சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125வது ஆண்டு விழாவும் நடத்தப்படுகிறது.

விழாவில் நடிகர் தனுஷ், அவரது மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நடிகை ஏமி ஜாக்சன், பாடகி முனைவர் சௌமியா, கவிஞர் சுமதிஸ்ரீ, சூழலியலாளர் பூ உலகின் நண்பர்கள் சுந்தரராஜன், கலைக்காவிரி கல்லூரியின் முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின், உதயசந்திரன் ஐஏஎஸ், பாடகி மகிழினி மணிமாறன், பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர், எழுத்தாளர் பூமணி, முனைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

சிவகாமியின் சபதம்:

கல்கியின் சிவகாமியின் சபதம் நாடகம் விரிகுடாப்பகுதி கலைஞர்களால் அரங்கேற்றப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாடகத்தை வழங்கிய அபிராமி கலை மன்றம் இந்த நாடகத்தையும் வழங்குகிறது. எழுத்து இயக்கம்: பாகீரதி சேசப்பன், இசை: ஸ்ரீதரன் மைனர், தயாரிப்பு மேற்பார்வை: வேணு சுப்பிரமணியம்.

தமிழிசை:

இசைக்கலைஞர் முனைவர் சௌமியா அவர்கள் தமிழிசை நிகழ்ச்சியை வழங்குகிறார். சங்க காலம் முதல் நிகழ்காலம் வரையிலான பாடல்களைப் பாடவுள்ளார். இசையறிஞர் பாபநாசம் சிவன் அவர்களின் 125-வது ஆண்டு விழாவில் முனைவர் சௌமியா பேரவையில் பாடுவது சிறப்பு.

பாபநாசம் சிவன் அவர்களின் 125-வது ஆண்டை கொண்டாடும் வகையில் 50-ற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் (சிறுவர் முதல் பெரியவர் வரை) அவரது பாடல்களைப் பாடி, இசையமைத்து அப்பெரியவரை நினைவு கூறவுள்ளார்கள்.

பறையிசை:

புத்தர் கலைக்குழுவைச் சேர்ந்த திரு. மணிமாறனும், மகிழினி மணிமாறனும் கலந்து கொள்ளும் தமிழர்களின் தொன்மையான இசையான பறையிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் விரிகுடாப்பகுதித் தமிழர்களும், வட அமெரிக்கா முழுவதிலிருந்து வரும் பறையிசைக் கலைஞர்களும் இணைந்து ஒரு மாபெரும் பறையாட்டத்தை ஆடவுள்ளார்கள்.

மேலும் தமிழ்க்கலைகளான பரதம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தெருக்கூத்து, போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

 

Post a Comment