காத்மாண்டு: நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா நேபாளத்தில் இருந்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், பழமையான கட்டிடங்கள், சரித்திர பெருமைவாய்ந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்திற்கு இதுவரை 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தான் நேபாளத்தில் இருந்ததாக பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
நிலநடுக்கத்தால் நேபாளமே பீதியில் உள்ளது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து மக்கள் மீது விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கத்தையடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை அறைகளை விட்டு காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். ஹோட்டல் கட்டிடம் இடிந்துவிடுமோ என்ற பயத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளனர். மக்கள் தெருக்களிலும், புல்வெளியிலும் தூங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment