ஆண்பாவம்... 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப் போடு போட்ட படம். நினைத்து நினைத்துச் சிரிக்க வைத்த காட்சிகள், காதுகளில் தேன் பாய்ச்சிய பாடல்கள், மிக அருமையான ஒளிப்பதிவு... இப்படி அனைத்து வகையில் நல்ல படம் என்றால் அது ஆண்பாவம்தான்.
தன் குருநாதர் கே பாக்யராஜ் எடுத்த தூறல் நின்னு போச்சு பாணியில், ஆனால் முழுக்க முழுக்க காமெடியாக இந்தப் படத்தை எடுத்திருப்பார் பாண்டியராஜன்.
எத்தனையோ பழைய தமிழ்ப் படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தை மட்டும் இதுவரை யாரும் ரீமேக் செய்யவில்லை.
ஏன்.. படத்தை உருவாக்கிய பாண்டியராஜனுக்கே, தன் மகன் ப்ருத்வியை வைத்து இந்தப் படத்தை ரீமேக் பண்ணும் ஆசையிருக்கிறது.
ஆனால் விகே ராமசாமி மாதிரி ஒரு நடிகர், கொல்லங்குடி கருப்பாயி மாதிரி அச்சு அசலான பாட்டி வேண்டுமே என்று நினைப்பு வர, அமைதியாகிவிட்டார் பாண்டியராஜன்.
இப்போது இந்தப் படத்தை ரீமேக் செய்யும் ஆசை வந்திருக்கிறது ஒரு நடிகருக்கு. அவர் உதயநிதி ஸ்டாலின்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த ஆண்பாவம் ரீமேக் ஆசையைச் சொன்னார்.
"இப்போ வெளியாகிற நண்பேன்டா படமே கிட்டத்தட்ட ஒரு கல் ஒரு கண்ணாடியின் ரீமேக்தான். எனக்கு 'ஆண் பாவம்' படத்தை ரீமேக் செய்ய ஆசை. படம் முழுக்க காமெடி இருக்கும். பாண்டியராஜன் சார், பாண்டியன் சார், வி.கே ராமசாமி சார்-னி அத்தனை கேரக்டர்களும் அருமையா இருக்கும். பாண்டியராஜன் கேரக்டர்ல நடிக்க ஆசைதான்... பார்க்கலாம்," என்றார்.
ஒருவேளை அப்படி ரீமேக் செய்தால், எந்தக் கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள், யார் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று உங்களால் பொருத்திப் பார்க்க முடிகிறதா?
Post a Comment