சென்னை: சென்னையில் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சினிமா நடிகை புவனேஸ்வரி. இவரது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூரில், 64 சென்ட் நிலத்தில் அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அஷ்டலட்சுமி என்ற பெயரில் திரையரங்கும் உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு புவனேஸ்வரி, தனது வீட்டை விற்பதற்காக அன்னூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்காக நடந்த பத்திரப்பதிவின் போது, புவனேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலிருந்த திரையரங்கத்தையும் சேர்த்து, போலிக் கையெழுத்துப் போட்டு, தனது பெயருக்கு சுப்பிரமணியம் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக தெரிகிறது.
சுப்பிரமணியம் ஏமாற்றி வாங்கிய அந்தத் திரையரங்கின் மதிப்பு ரூபாய் 3 கோடி என தெரியவந்துள்ளது. இது குறித்து புவனேஸ்வரி கடந்த 2012 ஆம் ஆண்டு அன்னூர் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த புகார் மனு கோவை மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அன்னூர் போலீஸார், புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Post a Comment