சென்னை: நடிகர் அஜித் வாழ்க்கையில் இப்போது அத்தனையும் சந்தோஷம்தான். மகன் பிறப்பு, மகனுக்கு பெயர் சூட்டுதல் என்று அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இதோ, இன்று தனது 15வது திருமண நாளில் காலடி எடுத்து வைத்துள்ளார் இந்த காதல் மன்னன்.
"மனம் விரும்பும் காதலியே, மனைவியாக வரும்போது, வாழ்க்கை இன்ப வரமாகும்" என்ற 'இளைய தளபதி' நடிகரின் திரைப்படப் பாடல் வரிகள், இந்த 'தல' நடிகருக்கு மிக பொருந்தும்.
அமர்க்களம் படத்தில் ஷாலியுடன் பழகும்போது மலர்ந்த காதல், இன்றுவரை அமர்க்களமாகவே போய்க் கொண்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் ஆதர்ஷ தம்பதிகள் என்று பெயரெடுத்த ஒரு சிலருக்கான பட்டியலில், இந்த தம்பதிகளும் இடம் உண்டு.
"நான் ஒரு காட்டாறு மாதிரியான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலை தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்த கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று ஷாலினி குறித்த தனது காதல் பற்றி முன்பொருமுறை பேட்டியளித்தார் அஜித்.
எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள். காட்டாறுபோல பாய்ந்து, மனதில் பட்டதை பேசியதால், அவரை வீழ்த்த காத்திருந்தவர்கள் கிளப்பிய சர்ச்சைகள்தான் எத்தனை..ஆனால், ஷாலினி என்ற ஒரு பக்குவப்பட்ட பெண்மணி அஜித்தின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அந்த காட்டாறு சமுத்திரத்தின் உள்ளே கலந்து, ஆழ்கடலின் அமைதியை தந்துகொண்டுள்ளது. இன்று, அவர் ஏதாவது பேசமாட்டாரா, எந்த தொலைக்காட்சியாலாவது தோன்ற மாட்டாரா என்று ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை வீழ்த்த வாய்ப்பு தேடியவர்களும், வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்களே. அது ஷாலினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் அல்லவா சாத்தியமாயிற்று.
தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தமிழக மக்களால் பார்க்கப்படும், ஷாலினியை திருமணம் செய்ததன் மூலம், 'நான் தமிழ்நாட்டு மருமகன்' என்றார் அஜித். ஆனால், இன்று தமிழ் ரசிகர்களோ அவரை 'தல'மகனாக்கி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அத்தனை, அஜித் ரசிகர்களுக்கும் ஷாலினி இன்று, அன்னைக்கு சமமான அண்ணியாகிவிட்டார்.
அமர்க்களம் பட சூட்டிங்கில், ஷாலினி கையில் கத்தி பட்டு ரத்தம் வந்த நிலையில், பதறிப்போய், துடிதுடித்து, ஒரு மருத்துவ குழுவையே ஸ்பாட்டுக்கு வரவைத்தார் அஜித். அடுத்தவருக்கு ஒன்றென்றால், தனக்கு வந்த துன்பம் போல பதறும் நல்ல மனிதராக இருக்கிறாரே என்று நினைத்து இதயம் இளகியது ஷாலினிக்கு.. ஆனால் கத்தி காயத்தை பற்றி கொஞ்சம் கூட கவலையின்றி 'ஜஸ்ட் லைக் தட்' என்று எடுத்துக்கொண்ட ஷாலினியை பார்த்து, அஜித்துக்கு ஒரு ஆர்வம் பற்றிக் கொண்டது. அதுதான் காதல் விதை விழுந்த இடம்.
ஒருவர் பதறுபவர், மற்றொருவர் பக்குவப்பட்டவர். இரு துருவங்களுக்குள் ஈர்ப்பு வருவது இயல்புதானே. ஒருவர் மிருதங்கமும், இன்னொருவர் வீணையும் வாசித்தால்தானே கச்சேரி களைகட்டும். அப்படித்தான், தற்போது அஜித் வாழ்வில் கச்சேரி களைகட்டிக் கொண்டுள்ளது. இப்போதுதான் திருமணம் செய்ததை போல இருந்தது.... இன்றோடு 15வது ஆண்டு திருமண நாளில் ஆதர்ஷ அஜித் தம்பதி காலடி எடுத்து வைத்துள்ளது.
அனௌஷ்கா, ஆத்விக்.. பெண்-ஆண் என இரு குழந்தைகள் இந்த திருமணத்தின் பொக்கிஷ பரிசுகள். வழக்கம்போல, ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகனை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதேபோன்ற வழக்கத்துடன், அமைதியாக ரசித்துக்கொண்டுள்ளார் இந்த ஆசை நாயகன்.
+ comments + 1 comments
All April 24th posts are repeated today (02.05.2015) why
Post a Comment