அனுமதியில்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால்... இளையராஜா எச்சரிக்கை

|

சென்னை: முறையான அனுமதி இல்லாமல் தனது படப் பாடல்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று ஆடியோ நிறுவனங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஐந்து ஆடியோ நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரந்த இளையராஜா, அதில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றார். இருப்பினும் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தடைய மீறி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இளையராஜா விடுத்துள்ளார்.

Ilayaraja warns audio houses of action against violation

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சில ஆடியோ நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.

அதன் அடிப்படையில் டி.ஜி.பி. மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு நீதிமன்றத்தின் உத்தரவையும், உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மற்ற எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கின்ற திருட்டு ஆடியோ, வீடியோ சி.டி.களின் விற்பனையை தடுக்க கோரியும் புகார் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம். எப்.எம். ரேடியோவில் ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எனது பெயரை என்னுடைய எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் யாரும் பயன்படுத்த கூடாது என்பதை இதன் மூலம் தெரியபடுத்துகிறோம்.

என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவர்களிடம் உரிய இழப்பீடும் நீதிமன்றம் மூலமாக பெறப்படும் என்று இளையராஜா கூறியுள்ளார்.

 

Post a Comment