மும்பை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. தனது அன்பு சகோதரி அர்பிதாவின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இங்கு தனது குடும்பத்துடன் வரவிருப்பதால் இந்த ஏற்பாடாம்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த இந்தத் திருமணத்திற்கு இப்போது ஏழு மாதங்கள் கழித்து ரிசப்ஷன் வைக்கக் காரணம் சல்மான் கோர்ட்,கேஸ் என்று அலைந்ததுதான். இப்போது வழக்கில் இருந்து சல்மான் வெளியே வந்துள்ளதால் அதைக் கொண்டாடும் வகையில் இந்த விழாவை நடத்துகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்ராமின் பேரன் ஆயுஷ் சர்மா தான் சல்மானின் மச்சினர். ஆயுசின் அப்பா தற்போதைய ஹிமாச்சலப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கிறார். எனவே விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
தனது பரபரப்பான வேலைகளுக்கு நடுவே அன்பு தங்கையை காண பறந்தோடி வரும் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனி ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறார் அர்பிதாவின் மாமனார்.
பல அரசியல் பிரபலங்களும், நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருப்பதால் ஏற்பாடுகள் பலமாகவும், பெரிதாகவும் நடைபெற்று வருகின்றன. சுமார் 20000 நபர்கள் வரை கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உள்ளூரின் புகழ் பெற்ற இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
Post a Comment