சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டாகிவிட்டது. அவர் தன் வாயால் அதைச் சொல்லவில்லை. அவ்வளவுதான்.
ஆனால் இயக்கப் போகிறவரும், தயாரிப்பாளரும் நூறு சதவீதம் உறுதி செய்து மீடியாவுக்குச் சொல்லிவிட்டார்கள். இரவெல்லாம் சமூக வலைத் தளங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
ரஜினியின் புதுப் படத்தை இயக்கப் போகிறவர், அட்டகத்தி, மெட்ராஸ் என தமிழ் சினிமாவுக்கு புதிய வெளிச்சம் தந்த இயக்குநர் ரஞ்சித். தயாரிப்பவர் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் எனப் பட்டம் தந்து, பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து அழகு பார்த்த கலைப்புலி தாணு.
கலைப்புலி தாணுவின் சினிமா வாழ்க்கை இன்றுதான் முழுமையான அர்த்தம் பெறுகிறது. காரணம், ரஜினியை வைத்து சினிமா தயாரிப்பது அவரது பல ஆண்டு கனவு. எண்பதுகளிலிருந்தே முயற்சித்து வரும் தாணுவுக்கு அந்த கனவு நிறைவேற முப்பத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்.. ஏன், நாளையே கூட வெளியாகக் கூடும். அதற்கு முன்பே படம் குறித்த தகவல்களை மீடியாவுக்குத் தந்து பரபரப்பை உருவாக்கியவர் முன்னணி பிஆர்ஓ நிகில் முருகன். ஒரு காலத்தில் ரஜினியின் பிஆர்ஓவும் இவர்தான். எந்திரனுக்கும் கூட இவர்தான் பிஆர்ஓ.
அவர் இந்த அறிவிப்பை நிகில் வெளியிட்டதிலிருந்து சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை அலறிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் தூக்கம் மறந்து தங்கள் 'தலைவர்' படம் குறித்த அவரவர் பார்வைகள், எதிர்ப்பார்ப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் ரஞ்சித்தை நாம் தொடர்பு கொண்டபோது, தகவல்களை நூறு சதவீதம் உறுதி செய்தனர். ஆனால் அறிவிப்பை ரஜினிதான் வெளியிடுவார் என்றனர்.
இந்தப் படம் முடிந்த கையோடு, ஷங்கரின் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார், அந்தப் படத்துக்கு தலைப்பு 'நம்பர் ஒன்' என்பதல்லாம் கூடுதல் தகவல்கள்!
Post a Comment