சென்னை: ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமான ஜீவா, ராம் படத்தின் மூலம் தன்னை நல்ல நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர்.
அதற்குப் பின் இவர் நடித்த படங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இவரின் அப்பா ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பாளராக இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் இவர் கொடுக்கவில்லை.
இயக்குனர் ராஜேஷ் முதன்முதலில் இவரை வைத்து எடுத்த சிவா மனசுல சக்தி படம் இவரை நச்சென்று நங்கூரமிட்டது போல் ரசிகர்களின் மனதில் நிறுத்தியது. அதுவரை சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானம் இப்படத்தில் இருந்து தான் முழு நேர காமெடியனாக மாறினார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.வி.ஆனந்தின் கோ படம் வந்து ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. கடைசியாக இவர் நடித்து வெளிவந்த யான் படம் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சென்று முடங்கியதால் படம் எதுவும் இல்லாமலேயே இருந்தார். ஆரம்ப காலத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஈ என்ற வித்தியாசமான படத்தில் நடித்து இருந்தார்.அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் மூலம் இருவரும் இணைவது குறிப்பிடத் தக்கது.
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாராவுடன் இணைந்து ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு திருநாள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நடிக்க வந்த போதும் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா இப்படத்தில் நடிப்பதால் படத்தின் மதிப்பு கூடியுள்ளது.
கதை கிராமத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தெனாவட்டு படத்திற்குப் பின் நடிகர் ஜீவா கிராமத்து இளைஞனாக இப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ராசு மதுரவன்,எஸ்.பி.ஜன நாதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த பி.எஸ்.ராம் நாத் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பின் முதல் கட்டம் இம்மாத இறுதியில் கும்பகோணத்தில் தொடங்குகிறது.
Post a Comment