பிரபாகரனின் தம்பிகள் நாங்கள், தப்பாகப் படமெடுப்போமா? - 'கங்காரு' சுரேஷ் காமாட்சி

|

உலகுக்கே கலாச்சாரம் கற்றுத் தந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. கங்காரு படத்தைப் பார்க்காமலே கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது, என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கங்காரு படத்துக்கு தடைகோரி ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Kangaroo Suresh Kamatchi statement

அந்த வழக்கு விசாரிக்க உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படமும் இன்று வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு படத்தைப் பார்க்காமலேயே, அதன் கதை, காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே படத்துக்குத் தடை கோரும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. என் கங்காரு படத்துக்கு எதிராகவும் அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கங்காரு படம் அண்ணன் தங்கைப் பாசத்தை புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கும் படம். துளி கூட ஆபாசமற்ற, சுத்தமான படம் என்று தணிக்கைக் குழுவால் யு சான்றளிக்கப்பட்ட படம்.

Kangaroo Suresh Kamatchi statement

படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தையே பார்க்காமல், இவர்களாக ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு படத்துக்கு தடை கேட்கிறார்கள். இது என்ன வகை நியாயம்?

உறவின் பெருமையையும் மேன்மையையும் சொல்லும் படம்தான் இந்த கங்காரு.

உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுத் தந்தது தமிழினம். அந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. பிரபாகரனின் தம்பிகளால் கலையுலகம் தலை நிமிருமே தவிர, இம்மியளவு தலைகுனிவு கூட ஒருநாளும் நேராது!

-இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

Post a Comment